​​எழுபதாவது சுதந்திர  தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், சுதந்திரத்தை பெறுவதற்கு அரும்பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் பெருந்தலைவர்கள் அனைவரின் தியாகத்தையும் மகிழ்வுடன் நினைவுக்கூர்ந்து, அவர்களுக்கு வணக்கம் செலுத்திடுவோம். இந்திய சுதந்திரம் நிச்சயம் தனியொருவரால் பெற்றுவிடவில்லை. விடுதலைப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஒவ்வொருவரும் தனக்கென ஒரு போராட்ட முறையை ஏற்றுக்கொண்டு தங்களால் இயன்ற பங்களிப்பினை  எவ்வித தன்னலமின்றி நாட்டு விடுதலைக்கும், வளர்ச்சிக்கும் வழங்கியுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளில் வேண்டுமானால்  வேறுபாடுகள் இருக்கலாமேத்தவிர அவர்களின் “இந்திய விடுதலை” என்னும் நோக்கத்தில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. எந்த தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் செய்தச் செயலை, அதன் நோக்கம் மற்றும் விளைவு போன்ற பின்னணிகளைத் தெரிந்துக்கொண்டு  தாராளமாய் விமர்சியுங்கள். அதைவிடுத்து, எங்கோ முகநூலிலோ, வாட்ஸ்அப்பிலோ எவ்வித ஆதாரமும், சரியான பின்னணியுமின்றி எழுதப்படுகின்ற அரைகுறைத் தகவல்களைப் படித்துவிட்டு எவரையும் குறைகூறாதீர்கள். நிச்சயம் நாம் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு தலைவரின் கருத்துக்கள் மற்றும் அவரின் செயல்பாட்டுவிதம் பிடித்திருக்கும். அவற்றைப்  பின்பற்றுவதும், அந்த தலைவரின் அருமை, பெருமைகளை எடுத்துரைப்பதும் தப்பில்லை. ஆனால், அதற்காக ஒரு தலைவரை உயர்த்திப் பேசுவதும் மற்றொரு தலைவரைத் தாழ்த்திப் பேசுவதும், எதிர்க்கருத்துக் கொண்டிருந்த தலைவர்களின் மீது தனிமனித தாக்குதல் புரிவதும் மிகவும் தவறானது. வரலாறு என்பது படிப்பவர்களுக்கு நல்லதொரு படிப்பினையை  தருவதாய் இருக்க வேண்டுமேயொழிய, வரலாற்றினை திரித்தெழுதி வன்முறையையும், கலவரத்தையும் உருவாக்குவதாய் அமைந்து விடக்கூடாது. நமது நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள், செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் அதிகமாய் இருந்த போதிலும், இதுவரை அடைந்துள்ள வளர்ச்சியையும், நம் நாட்டில் நிலவும் ஜனநாயகத்தன்மையையும், நம்மோடு சுதந்திரமடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். இந்த பொன்னாளில், நாம் அடைந்துள்ள வளர்ச்சிகள், பெற்றுள்ள வசதிகள் மற்றும் உரிமைகளுக்காக உழைத்த உன்னத தலைவர்களை மகிழ்ச்சியுடன் நினைவுக் கூர்ந்திடுவோம். இந்தியா உலக அரங்கில் பல உச்சங்களைத்  தொட்டிட, வளர்ச்சியடைந்த மற்றும் வல்லரசு நாடக மாறிட அனைவரும் தெடர்ந்து உழைத்திடுவோம்! உயர்ந்திடுவோம்!!


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிந்திடுவோம்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துகளுடன்,

இலுப்பையூர். தே. அரவிந்தன்.

Leave a Reply